இலங்கையில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது .

 

 


 

 நடப்பு ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல் மே 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானைகளின் இறப்பிற்கான காரணங்கள் மற்றும் வலயங்கள் குறித்த உத்தியோகபூர்வ விபரங்களை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் தரவுகளின்படி,

உயிரிழந்த யானைகளில் 20 யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளன.

சட்டவிரோத மின்சார வேலி அமைப்புகள் காரணமாக 15 யானைகள் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளன.

போதை மற்றும் வெடிபொருட்கள் கலந்த 'ஹக்கபட்டாஸ்' எனப்படும் வெடிபொருட்களை உட்கொண்டதால் 10 யானைகள் உயிரிழந்துள்ளன.

பாதுகாப்பு அற்ற விவசாயக் கிணறுகளுக்குள் விழுந்ததில் 5 யானைகள் உயிரிழந்துள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக தொடருந்து மோதல்கள், நீரில் மூழ்குதல் மற்றும் இதர விபத்துக்கள் காரணமாகவும் காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

காட்டு யானைகளின் மரணங்கள் அதிகளவில் கிழக்கு பிராந்தியத்திலேயே பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய வனவிலங்கு வலயங்களிலும் கணிசமான அளவு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளன.


மனித-யானை மோதலின் விளைவாக, இதே காலப்பகுதிக்குள் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி 35 மனித உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் கவலை வெளியிட்டுள்ளது.