BATTI VAATHAN & SIVAKUMAR
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, "முழு நாடும் ஒன்றாக" என்ற தேசிய செயல்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாபெரும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியும் நடைபவனியும் மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.
தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியன ஒன்றிணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
மட்டக்களப்பு மங்களராமய விகாரையிலிருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு நடைபவனி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக காந்தி பூங்காவை சென்றடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் "போதைப்பொருள் பாவனையை சமூகத்தில் இருந்து அகற்றுவோம்!" என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக:
திரு. சிவம் பாக்கியநாதன் (மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர்)
உயர் பொலிஸ் அதிகாரிகள்
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் இளையோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நடைபவனியின் நிறைவாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகள் அரங்கேறின. குறிப்பாக, போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் ஆரோக்கிய சீர்கேடுகளைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில், இளைஞர்களால் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் மிகக் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டன.
இவ்விழிப்புணர்வுப் பேரணியானது மட்டக்களப்பு நகர் பகுதியில் பெரும் வரவேற்பையும், பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.






































































