வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நீண்ட நாள் ஆழ் கடல் மீன் பிடித் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் கடலின் படகினை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.











 வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நீண்ட நாள் ஆழ் கடல் மீன் பிடித் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள்  கடலின் படகினை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டநாள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லும் மீனவர்களின் வலையினை திருகோணமலை மாவட்ட கடலில் மீன்பிடிக்க வரும் சிறிய படகு மீனவர்கள் வெட்டி பிடிக்கப்பட்ட மீன்களை களவாடிச் செல்வது தொடர்பாக  போராட்டாத்தில் ஈடுபட்டனர்.

தாங்கள் மீன்பிடி தொழிலுக்காக ஐந்து இலட்சம் ரூபாய் செலவு செய்து செல்லும் நிலையிலும் அத்தோடு எரிபொருள் விலையும் அதிகரித்து காணப்படும் நிலையிலும் கடன் பெற்று சென்றால் கடற்படையின் அனுமதி இல்லாமல் ஆழ்கடலுக்கு இரண்டு இஞ்ஜின்களை பொருத்தி வரும் சிறிய படகு மீனவர்கள் தங்களது வலைகளை வெட்டி மீன்களை எடுத்து செல்கின்றனர்.

அத்தோடு தாங்கள் அவர்களுடன் சண்டையிட முற்படும் போது பெற்றோல் குண்டுகள் வைத்து மிரட்டுவதாகவும், தங்களது படகுகளை எரிப்போம் என்று மிரட்டுகின்றனர்.

 நாங்கள் கடற்படையின் அனுமதி பெற்று ஆழ்கடலுக்கு செல்கின்றோம் இவர்கள் எவ்வித அனுமதியும் இன்றி இரவு வேளைகளில் திருகோணமலை மாவட்ட மீனவர்கள் அத்துமீறி நுழைத்து இவ்வாறான நாசகார வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களது நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. ஐந்து இலட்சத்திற்கு மேல் செலவு செய்து கடலுக்கு செல்லும் போது வலைகளை இவர்கள் வெட்டிச் செல்வதால் வலைகளை திருத்த முடியாமலும் புதிய வலைகள் வாங்க முடியாமலும் இக்கட்டான நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக   மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கு நிரந்தர தீர்வாக சிறிய படகு மீனவர்களும் கடலில் மீன்பிடிக்க அனுமதி பெற வேண்டும், அத்தோடு ஒரு இஞ்ஜின் மாத்திரம் அவர்கள் பொறுத்தி தொழில் செய்ய வேண்டும், இரவு வேளைகளில் இவ்வாறான நாசகார செயல்களை செய்யாமலும், படகுகளில் பெற்றோல் குண்டுகள் போன்ற நாசகார வேலைகளுக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்திருப்பவர்களை கைது செய்யவும், இவ்வாறான கள்வர்களிடம் இருந்து மீனவர்களின் வாழ்வதாரத்தை காப்பாற்ற நாட்டில் ஜனாதிபதி, மீன்பிடி அமைச்சர், கடற்படையினர்; மற்றும் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் நாட்டின் ஜனாதிபதி வாழைச்சேனை மீன் பிடித் துறைமுக மீனவர்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வருகை தர வேண்டுவதுடன், இப்படிப்பட்ட நாசகார செயல் மூலம் மீன்பிடித் தொழிலை விட வேண்டிய சூழல் உருவாகாத வகையில் அரசாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுவதுடன், ஜனாதிபதி விவசாயம் மற்றும் மீனவர்கள் மீது அக்கறை செலுத்தி வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  ந.குகதர்சன்