தென் மாகாணத்தில் தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே ஒரு வகை வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், சுகாதாரத்துறையினர் அங்கு உடனடி விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை இந்த வைரஸ் காய்ச்சலால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள சில பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அசுத்தமான கைகள், உணவு அல்லது நீர் ஆகியவற்றின் மூலமும், சுவாசத் துளிகள் மற்றும் வைரஸ் படிந்துள்ள மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும் இந்த வைரஸ் பரவக்கூடுமென சிறுவர் நல விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் மகேஷ் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெனியாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம் கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி,வாந்தி,வெளிச்சத்தைப் பார்க்க இயலாதுள்ளமை மற்றும் சத்தங்களைக் கேட்கும்போது ஏற்படும் அசௌகரியம், கழுத்து விறைப்பு ஆகிய அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளன.இந்நோயைக் கட்டுப்படுத்த ‘கைச் சுகாதாரம்’ மிக முக்கியமானதென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சவர்க்காரமிட்டு முறையாகக் கைகளைக் கழுவுவதே அதிக பலனைத் தரும்.
உணவுப் பாத்திரங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்டப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அங்குள்ள மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நோய் அறிகுறிகள் தென்படும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கோ அல்லது ஏனைய பொது இடங்களுக்கோ அனுப்பாது வீட்டிலேயே வைத்திருப்பதுடன், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் கோரப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைந்த பின்னரும் பல வாரங்களுக்கு அவர்களின் சுவாசச் சுரப்புகள் மற்றும் மலம் வழியாக வைரஸ் வெளியேற்றக்கூடும்.எனவே நீண்ட காலத்திற்கு சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.அத்துடன் தெனியாய நகரம் மற்றும் பாடசாலைகளுக்கு நீர் விநியோகம் செய்யும் நீர் நிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் என்.ஜி.எஸ். பண்டிதரத்ன தெரிவித்துள்ளார்.தெனியாய பகுதியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதேவேளை, அடையாளம் காணப்பட்ட நீர் நிலைகளில் தற்போது குளோரின் இடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





