சந்நிதியில் நடந்தது என்ன? பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி விளக்குகிறார் .

 




























வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்செல்வச்சந்நிதிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிய இலங்கையின் மிகநீண்ட பாதயாத்திரையின்  நேற்றைய முதல் நாள்(24) பயணத்தின் போது அங்கே குழப்பம் ஏற்பட்டு இருந்தது .

அதனால் காலை 9:00 மணிக்கு  புறப்பட வேண்டிய இப் புனித பாதயாத்திரை 12:00 மணியளவில்தான் அங்கிருந்து புறப்பட நேர்ந்தது .

இது தொடர்பாக கடந்த 14 வருடங்களாக பாதயாத்திரையில் ஈடுபட்டும், கடந்த ஏழு வருடங்கள் தலைமை தாங்கியும் , மூன்று மாகாணங்களையும் 7 மாவட்டங்களையும் 815 கிலோமீட்டர் தூரம் 58 நாட்களில் கடந்து வருகின்ற பாதயாத்திரைக்குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி அது பற்றி கூறுகையில் ..

நாங்கள் காலா காலமாக சந்நிதி ஆலயத்தில்  மூலஸ்தானத்தில் எமது வேல்களை வைத்து பூஜை முடிந்த பிற்பாடு அதனை பூசகர் எங்களிடம் ஒப்படைப்பதும் நாங்கள் அதை எடுத்துக் கொண்டு ஆலயத்தை வலம் வந்து வணங்கிய பின், அருகில் உள்ள கலாநிதி மோகன்சாமியின் சந்நிதி ஆச்சிரமத்தை சென்றடைந்து  அங்கு காலை ஆகாரம் உண்டபின் அங்கிருந்து விடை பெற்று செல்வது வழக்கம் .

ஆனால், இம்முறை வழமைக்கு பாரம்பரியத்திற்கு மாறாக எமது  பிரதான வேலை மூலஸ்தானத்தில்  வைக்கப்படவில்லை. அதேவேளை சிலரன சின்ன வேல்கள் முதல் நாளிலே உள்ளே வைக்கப்பட்டது. 
காலையில் 5.45 வரை பார்த்தோம். எமது பிரதான வேல் உள்ளே கொண்டு செல்லப் படவில்லை. பூஜையும் நடந்தது.

ஏன்? இந்த வேல் உள்ளுக்குள் வைக்கப்படவில்லை? என்று பூசகரிடம் கேட்டேன்.
 அது எனக்கு மேலிடத்து உத்தரவு என்றார்.
 சுரேஸ் என்பவரது கட்டளை என்று பின்னர் அறிந்தேன்.

 உள்ளுக்குள் வைத்த ஏனைய  சின்ன வேல்களையும் அவர் உரிய சாமிகளிடம் மீள ஒப்படைக்கவில்லை.
அதனையும் தர முடியாது என்றும் சொல்லப்பட்டது.

 இதனால் எமது அடியார்கள் ஆத்திரப்பட்டார்கள். பாரம்பரியத்தை வரலாற்றை மாற்றியுள்ளார்கள் இம்முறை.
இருந்தாலும் கவலையுடன் நாங்கள் சந்நிதியாரை வணங்கி வேலை நாமாகவே  எடுத்துக் கொண்டு ஊர்வலம் வந்து மோகன் சாமியின் சந்நிதி ஆச்சிரமத்திற்கு சென்றோம்.

 அங்கே சென்று அங்கிருக்க கூடிய பூஜை அறையில் வேலை வைத்து விட்டு அங்கு அவரது காலையாகாரத்தை உண்டோம்.
பலரும் ஏனைய பொருட்களையும் வழங்கினர்.
அவற்றை பெற்றுக் கொண்ட பின்னர் முறைப்படி மோகன் சாமி வேலை எடுத்து ஆசீர்வதித்து எமது கைகளில் ஒப்படைத்தார்.

ஏனையோருக்கும் அதே பாணியில் ஆசிர்வாதம் பண்ணினார் .

 நாங்கள் அனைவரும் அங்கிருந்து 12 மணி அளவில்  முதல் நாள் பயணத்தை தொடங்க வேண்டியிருந்தது. வேகாத வெயிலில் கால் கொப்பளிக்க நடக்க வேண்டிய தாயிற்று.

 இதற்கெல்லாம் மூல காரணமாக ஏற்கனவே இந்த பயணத்தில் ஈடுபட்டு 2018 ஆம் ஆண்டு பாதயாத்திரையை கைவிட்ட  வேல்ச்சாமி என்பவர் தான் காரணம் என்று பலரும் சொல்ல நாங்கள் கேள்விப்படுகின்றோம். அப்படி எனில் அவரை முருகன் பார்த்து கொள்ளட்டும்.

நாம் 116 பேர் தற்சமயம் எழுதுமட்டுவாளை நோக்கி பயணிக்கின்றம். நாளை பளைக்கு செல்லவிருக்கிறோம். என்றார்.
 
 
 (  வி.ரி.சகாதேவராஜா)