இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில்
நிலைக்கொண்டுள்ள, வளிமண்டல தாழமுக்கநிலை வலுவிழந்து வருதாக, வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், மழையுடனான காலநிலையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று (17) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், மின்னல் தாக்கங்களினால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.





