ஹொங்கொங்கில் வியாழக்கிழமை (28) ஆரம்பமான 22-வது ஆசிய 20 வயதுக்குட்பட்டோருக்கான (U20) தடகள செம்பியன்ஷிப் தொடரில், மகளிருக்கான 1500 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீராங்கனை தருஷி அபிஷேகா தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அவர், போட்டித் தூரத்தை மிகச் சிறப்பான முறையில் 4 நிமிடங்கள் 31.41 விநாடிகளில் கடந்து முதலிடத்தைப் பெற்று, இந்த மைல்கல் சாதனையை நிகழ்த்தினார்.
இந்தப் போட்டியில் ஈரானின் மரியம் பலுஊதாகி இரண்டாம் இடத்தையும், தென்கொரியாவின் சொங் டவ்சன் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
மத்திய தூர ஓட்டப்பந்தயங்களில் தொடர்ச்சியாகத் திறமைகளை வெளிப்படுத்தி வரும் தருஷி அபிஷேகா, இந்தத் தொடரில் 800 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டியிடுகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய சிறார்களின் (Kids) தடகள செம்பியன்ஷிப் தொடரில் அவர் 800 மீற்றர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹொங்கொங்கின் 'கை டக்' மைதானத்தில் மே 28 முதல் 31 வரை நடைபெறும் இந்த செம்பியன்ஷிப் தொடரில், 40 நாடுகளைச் சேர்ந்த இளம் வீர-வீராங்கனைகள் 46 போட்டிப் பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். இலங்கை சார்பில் 15 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உள்ளடங்கலாக 22 பேரைக் கொண்ட தடகளக் குழுவொன்று இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஹொங்கொங் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.png)




