Sivakumar- chief editor
இலங்கையை போதைப்பொருள் அற்ற நாடாக மாற்றுவதற்காக, அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக" எனும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (18) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மாவட்ட போதைப்பொருள் முன்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தடுப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. குறிப்பாக, "விற்கின்ற - அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்: அகன்று செல்" எனும் தொனிப்பொருளிலான துண்டுப்பிரசுரங்கள் இதன்போது மக்களிடம் கையளிக்கப்பட்டன.
மேலும், போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் அதிதிகளால் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வுப் பிரசாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள 57 பொலிஸ் நிலைய எல்லைகளிலும் இவ்வாறான ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு,
"மக்களின் வாழ்விலிருந்து போதைப்பொருள் கலாசாரத்தை முற்றாக அகற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் கொண்டுவரப்படும் நச்சுப் போதைப்பொருட்களை அழிப்பதுடன், இதனுடன் தொடர்புடைய கடத்தல்காரர்களை உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளில் இருந்தவாறு இயங்கினாலும் அவர்களைக் கைது செய்யப் பொலிஸார் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் வாழ்வைச் சீரழிக்கும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை தொடர்பான துல்லியமான தகவல்களைப் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி '1818' என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு வழங்க முடியும் எனவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரதீப் களுபான, மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலா ரத்ன உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள், போதைப்பொருள் முன்தடுப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.




