அதிர்ச்சிச் சம்பவம்: வகுப்பறையில் தகாத வார்த்தை பேசிய 8 வயது மகனின் வாயில் இரும்புக் கம்பியால் சூடு வைத்த தந்தை கைது!


மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை பகுதியில், 8 வயது சிறுவனின் வாயில் இரும்புக் கம்பியால் சூடு வைத்த கொடூர சம்பவத்துடன் தொடர்புடைய அவரது தந்தையை நேற்று (28) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3 இல் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன், வகுப்பறையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக, வகுப்பறை ஆசிரியர் சிறுவனின் பெற்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை, கடந்த செவ்வாய்க்கிழமை (26) மகனின் வாயில் இரும்புக் கம்பியால் சூடு வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி கிராம உத்தியோகத்தர் (G.N), நேற்று வியாழக்கிழமை (28) சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சிறுவனுக்குச் சூடுவைத்த தந்தையைக் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுவனைச் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகச் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.