பிரபல தொழிலதிபர் தம்மிக பெரேராவிற்கு சொந்தமான இலங்கையின் முன்னணி வணிகக் குழுமமான ஹேலிஸ் (Hayleys Group), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக ரூ. 8 பில்லியன் நஷ்டஈடு கோரி என்வழக்கு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக தங்களது நிறுவனங்களுக்கு எதிராக அவதூறான மற்றும் அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹேலிஸ் பி.எல்.சி. (Hayleys PLC) நிறுவனம் ரூ. 5 பில்லியனும், ஹேலிஸ் ரீடைல் ஹோல்டிங்ஸ் (Hayleys Retail Holdings) நிறுவனம் ரூ. 2 பில்லியனும், தி கிங்ஸ்பரி பி.எல்.சி. (The Kingsbury PLC) ஹோட்டல் நிறுவனம் ரூ. 1 பில்லியனும் நஷ்டஈடாகக் கோரியுள்ளன.
விமல் வீரவன்சவின் யூடியூப் காணொளிகள் மற்றும் ஹிரு தொலைக்காட்சியின் "சலகுண" நிகழ்ச்சியில் அவர் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஹேலிஸ் நிறுவனம் அரச அதிகாரிகளுடன் இணைந்து ஊழல் மிக்க கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதாகவும், ஹேலிஸ் ரீடைல் நிறுவனம் ஊழல் பணத்தை சலவை செய்யும் வழியாக (Money Laundering) செயல்படுவதாகவும், கிங்ஸ்பரி ஹோட்டல் நிலக் குத்தகை சலுகைகளைப் பெற அரச அதிகாரிகளுக்கு முறையற்ற விருந்துகளை (Parties) ஏற்பாடு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என மறுத்துள்ள நிறுவனங்களின் சட்டத்தரணிகள், குறித்த அவதூறு உள்ளடக்கங்களை சமூக ஊடகங்களிலிருந்து உடனடியாக நீக்கி, கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கடுமையான நீதிமன்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
See less





