செவிலியர் நோக்குநிலை மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை (Nursing Orientation and Coordination Training) வெற்றிகரமாக முடித்த 515 இளம் அறிவியல் செவிலியர் (B.Sc. Nursing) பட்டதாரிகளை நேரடிச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் இலவச சுகாதார சேவையின் மனித வளம், தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கமைய, கொழும்பு 07 இல் உள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவன (Sri Lanka Foundation Institute) வளாகத்தில் (இன்று 29ஆம் திகதி) முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ விழாவில், இந்த நியமனதாரர்களுக்கு தரம் III செவிலியர் உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நியமனதாரர்களை மத்திய அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரதான மருத்துவமனைகள் மற்றும் போதனா மருத்துவமனைகளில் (Teaching Hospitals) இணைப்பதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டின் சுகாதார சேவையின் தற்போதைய தரவுகளின்படி, ஒட்டுமொத்த அரச சுகாதார சேவையில் 43,553 செவிலியர் உத்தியோகத்தர்களைக் கொண்ட மனிதவலுவினர் தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், இத்துறைறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மட்டும் தரம் III பிரிவைச் சேர்ந்த 3,441 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் நாட்டின் சுகாதார சேவையில் இணையும் நோக்கில், தற்போது நாடு முழுவதிலும் உள்ள செவிலியர் கல்லூரிகளில் (Nursing Schools) சுமார் 7,800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது தொழில்முறைப் பயிற்சியைப் பெற்று வருகின்றனர்.
மேலும், எதிர்கால மருத்துவச் சேவைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தேசிய செவிலியர் பயிற்சிப் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் மேலும் 3,000 புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதியையும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் தற்போது பெற்றுள்ளது.





