வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் கட்டணத்தை (Surcharge) விதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு புத்திசாலித்தனமான நடவடிக்கை .

  

 


வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் கட்டணத்தை (Surcharge) விதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்களைப் பாதுகாக்கும் ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

​உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கையின் பலவீனமான பொருளாதாரப் பிரிவைப் பாதுகாப்பதற்கும், பற்றாக்குறையான வெளிநாட்டு நாணய இருப்பைப் பேணுவதற்கும் இந்த நடவடிக்கை அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், 2026 மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட கடன் கடிதங்களுக்கு (LC) இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை அவர் வரவேற்றுள்ளார்.

எரிசக்தி சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கும் உலகளாவிய மோதல்களால் இலங்கையின் பொருளாதார மீட்சி இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே உள்ளதாக எச்சரித்துள்ள அவர், சிறிய நாடுகள் இவ்வாறான போர்களின் விளைவாகப் பாரிய விலையைக் கொடுக்க வேண்டியுள்ளதால், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.