எதிர்வரும் 31ஆம் திகதி முதல் அரச நிறுவனங்களில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு முற்றாகத் தடை!

 


அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் எதிர்வரும் 31ஆம் திகதி முதல் முற்றாகத் தடை விதித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் திண்மக் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கமைவான சபைகளின் தலைவர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். 

 

அத்துடன், ஏனைய ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நிறுவனங்களுக்குள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து நிறுவனத் தலைவர்களும் எடுக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சுற்றறிக்கை உட்பட, கடந்த வருடம் ஏப்ரல் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் விதிகளும் தொடர்ந்து செல்லுபடியாகும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

அதன்படி, அனைத்து அரச நிறுவனங்களும் கழிவுகளைக் குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல்  மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகிய “3R” கோட்பாட்டைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சின் முழுமையான உடன்பாட்டுடன் இந்த புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.