“3 வகை நோய்கள் ஒழிப்பு” தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 


தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகிய மூன்று நோய்களும் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் “3 வகை நோய்கள் ஒழிப்பு” தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மற்றும் அதன் இலக்குகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (15) கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் வைத்திய நிபுணர் திலங்க ரூவான் பத்திரன, இலங்கையிலிருந்து இந்த 3 வகை நோய்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்திருந்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்கனவே எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் ஆகிய நோய்கள் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதனுடன் 'ஹெபடைடிஸ் பி' நோயையும் இணைத்து, மூன்று நோய்களையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்துவதே இந்த ‘3 வகை நோய்கள் ஒழிப்பு’ திட்டத்தின் நோக்கமாகும். அதற்கமைய, ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் உள்ள அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் வழமையான எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகளுடன் மேலதிகமாக ‘ஹெபடைடிஸ் பி’ பரிசோதனையும் கட்டாயமாக முன்னெடுக்கப்படும். நாட்டில் ஹெபடைடிஸ் பி நோயின் தாக்கமானது 1 சதவீதத்துக்கும் குறைவாகவே காணப்படுகிறது.

உலக சுகாதார ஸ்தாபனமும் 2024 ஆம் ஆண்டில் இலங்கையை இந்நோயைக் கட்டுப்படுத்திய நாடாக அங்கீகரித்துள்ளது. இருப்பினும், இதனை முழுமையாகக் கட்டுப்படுத்திய நாடாக மாறுவதே எமது இலக்கு. ஒரு கர்ப்பிணித் தாய்க்கு இந்நோய் இருப்பது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், அவருக்கு முறையான சிகிச்சைகளை வழங்குவதன் மூலமும் பிறக்கும் குழந்தைக்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 24 மணித்தியாலங்களுக்குள் ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசியை வழங்குவதன் மூலமும் குழந்தைக்கும் இந்நோய் பரவுவதைத் தடுத்து, ஆரோக்கியமான எதிர்காலச் சந்ததியை உருவாக்க முடியும்.

ஆகையால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பரிசோதனைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து, தரவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் 2028 ஆம் ஆண்டளவில் இலங்கையை இந்த மூன்று நோய்களும் தாயிடமிருந்து குழந்தைக்குப் பரவுவதை முழுமையாகக் கட்டுப்படுத்திய நாடாக உலக சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார்களும் அரசாங்கத்தினால் இலவசமாக முன்னெடுக்கப்படும் இந்தப் பரிசோதனைகளுக்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.