குருக்கள்மடம் மனிதப் புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடம் தொடர்பிலான பரிசோதனை அறிக்கை 22ம் திகதிக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும்..! சட்டத்தரணி முபாறக் முவாஸ்ஸம்

 



மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் காத்தான்குடி முஸ்லீம்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டமை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காத்தான்குடி குரல்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட வழக்கின் பிரகாரம் கடந்த மார்ச் மாதம் அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற போது அங்கு எவ்வித பொருட்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மனுதாரர்களால் மேலும் மூன்று இடங்கள் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சொந்தச் செலவிலேயே கருவிகள் மூலம் குறித்த இடங்கள் பரிசோதிக்கப்படுவதற்கான அறிக்கை கடந்த ஏப்ரல் 20ம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதற்கமைவாக குறித்த வழக்கு மீண்டும் மே 14ம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மே 15, 16 மற்றும் 17ம் திகதிகளில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த விடயம் தொடர்பில் வழக்கின் சட்டத்தரணி முபாறக் முவாஸ்ஸம் தெரிவிக்கையில்,
குறித்த வழக்கின் முன்னேற்றங்களைத்தெரியப்படுத்தும் முகமாக இன்று 18ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 22ம் திகதிக்கு முன்னர் குறித்த சோதனையின் இறுதி அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிப்பதாக இப்பரிசோதனை மேற்கொண்ட பேராசிரியர் தலைமையிலான குழுவினர் மன்றுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.
குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பிற்பாடு மேலதிக நடவடிக்கை தொடர்பில் ஆராயும் முகமாக குறித்த வழக்கானது எதிர்வரும் மே 26ம் திகதி மன்றில் அழைக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.