மட்டக்களப்பு புளியந்தீவு 'ரிதம்' அமைப்பின் 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இலவச வைத்திய முகாம்-2026.05.27

 


















































புளியந்தீவு ரிதம் அமைப்பின் 21வது ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் முகமாக, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்களின் ஏற்பாட்டில், ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட இலவச வைத்திய முகாம் இன்றைய தினம் (27.05.2026) ரிதம் சனசமூக நிலையக் கட்டடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மங்கல விளக்கேற்றலுடன் பக்திபூர்வமாகத் துவங்கிய இவ்வைத்திய முகாமில், பொதுமக்களுக்கான பல்வேறுபட்ட மருத்துவப் பரிசோதனைகளும் ஆலோசனைகளும் இலவசமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி இளையதம்பி சிறிநாத், கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி கே.அருளானந்தம், பல்வைத்திய நிபுணர் யாழினி சிறிவரதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவர்களுடன் விசன் கெயார் (Vision Care) நிறுவனத்தின் கண் பரிசோதகர்கள், மண்முனை வடக்கு இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர், புளியந்தீவு தெற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நியூ பயணியர் வைத்தியசாலையின் இரத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனைக் குழாத்தினர், ரிதம் சனசமூக நிலையம் மற்றும் ரிதம் இளைஞர் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

 முகாமின் போது, வைத்திய கலாநிதி கே.அருளானந்தம் மற்றும் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் ஆகியோரால் பொதுமக்களுக்கு விரிவான வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல்வைத்திய நிபுணர்களினால் பற் பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் பல் பரிசோதனை ஊர்தி (Mobile Dental Unit) மூலம் சில அவசர சிகிச்சைகளும் உடனுக்குடன் முன்னெடுக்கப்பட்டன.

மேலும், விசன் கெயார் நிறுவனத்தின் கண் பரிசோதனைக் குழாத்தினரால் அதிநவீன வசதிகளுடன் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையுடையோருக்குக் இலவசக் கண் கண்ணாடிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பரிந்துரைகளும் வழங்கி வைக்கப்பட்டன. அதேநேரம், நியூ பயணியர் வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினரால் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தப் பரிசோதனைகளும், சர்க்கரை நோயைக் கண்டறிவதற்கான இரத்த மாதிரிப் பரிசோதனைகளும் துல்லியமாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புளியந்தீவு பகுதி மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்த இவ்வைத்திய முகாம்,   பல   நூற்றுக்கணக்கானோரின்    பங்கேற்புடன் திட்டமிட்டபடி  வெற்றிகரமாக நிறைவுபெற்றது!