19 நாட்களேயான கைக்குழந்தையை ஒரு இலட்ச ரூபாவிற்கு விற்க முயற்சி: தாய் உட்பட 6 பேர் அதிரடியாக கைது .

 



19 நாட்களேயான கைக்குழந்தை ஒன்றை ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற தாய் உள்ளிட்ட 6 பேரை புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஆனமடுவ - அடிகம பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குழந்தையை வாங்குவதற்காக அழைத்து வரப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வான் ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பின்வருவோர் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்:

குழந்தையின் தாய், அவரது மூத்த சகோதரர், அவரது மனைவி, குழந்தையை வாங்கத் தயாராக இருந்த தம்பதியினர் மற்றும் வானின் சாரதி ஆகியோர் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, குழந்தையை விற்க முயன்ற தாயும் அவரது சகோதரரும் ஆனமடுவ - அடிகம பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அதேவேளை, குழந்தையை வாங்கவிருந்த தம்பதியினர் கல்பிட்டி - மாம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், கைப்பற்றப்பட்ட வானின் சாரதி புத்தளம் - பாலாவி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சட்டவிரோத குழந்தை விற்பனைப் பின்னணியில், இடைத்தரகராக மருத்துவர் ஒருவர் செயற்பட்டுள்ளமை மேலதிக விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேக நபர்கள், மீட்கப்பட்ட கைக்குழந்தை மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வான் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகவும் விசாரணைகளுக்காகவும் புத்தளம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.