ஏறாவூர் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற வீதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தண்ணீர் தொட்டியிலிருந்து, 11 வயதுச் சிறுமியொருவர் நேற்று (28) வியாழக்கிழமை மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் 5ஆம் பிரிவைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா என்ற சிறுமியே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
இச்சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில், சிறுமி தனது தந்தையின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்துள்ளார். நேற்று மாலை சிறுமியும் அவரது சகோதரனும் மாத்திரம் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
இதன்போது, வெளியில் சென்றிருந்த தந்தை வீடு திரும்பிய வேளையில், குளியலறையிலிருந்த சுமார் இரண்டரை அடி உயரமுடைய தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாகச் சிறுமியை மீட்ட தந்தை, சிகிச்சைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளார். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே சிறுமி உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஏறாவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





