இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 


இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான அகழ்வுகள் புதையல் தொடர்பான மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆராய்ச்சிகளின்படி, இலங்கையின் வரலாற்றில் எந்தவொரு மன்னரோ அல்லது வேறு எந்தவொரு நபரோ எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் புதையல்களைப் பூமியில் புதைத்து வைக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் புதையல் விபரங்கள் அடங்கிய ஆவணமாக நம்பப்படும் "நிதான வதுல" என்பது முற்றிலும் பொய்யான மற்றும் ஏமாற்றுக் கதையாகும் என அவர் தெளிவுபடுத்தினார்.

மக்கள் மத்தியில் நிலவும் மூடநம்பிக்கை காரணமாக, ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு கல் தூண் தென்பட்டாலே, அங்கு புதையல் இருப்பதாகக் கருதி மக்கள் தோண்டத் தொடங்கிவிடுகின்றனர்.

அவ்வாறான அகழ்வுகளின் போது கண்டெடுக்கப்படும் பொருட்கள் புதையல்கள் அல்ல, அவை நாட்டின் வரலாற்றுப் பெறுமதிமிக்க தொல்பொருட்கள் மாத்திரமே ஆகும்.

தொல்பொருள் தளங்களில் இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத அகழ்வுகளை வெறும் சட்ட அமலாக்கத்தினால் மட்டுமே முழுமையாகத் தடுத்து நிறுத்திவிட முடியாது என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

சட்டத்துடன் இணைந்து, பொதுமக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், போலிப் புதையல் கதைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தொல்பொருள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.