இலங்கையின் சுகாதார அமைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் குழு ஒன்று இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.
இந்த குழுவினர் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்ததுள்ளனர்.
சுகாதார அமைப்பின் தற்போதைய செயல்பாடு மற்றும் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்காக ஆரோக்கிய சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை நிறுவும் அரசின் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
நிபுணர் குழுவினர் தங்களது ஆய்வை மேற்கொள்வதற்காக வெள்ளிக்கிழமை (24) வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவும் கலந்துகொண்டார்.
கூட்டத்தின் போது, 1,000 ஆரோக்கிய சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்கள் குறித்து அமைச்சர் ஜெயதிஸ்ஸ தூதுக்குழுவினருக்கு விளக்கினார்.
இந்த மையங்களை நிறுவுவதன் முக்கிய நோக்கம், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துதல், நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், மற்றும் கிராமப்புற மக்களுக்கு அவர்களின் சமூகங்களுக்கு அருகிலேயே வேகமான, உயர்தரமான சுகாதார சேவைகளை வழங்குதல் ஆகியவையே என்று சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த மையங்கள், தொற்றா நோய்களுக்கான பரிசோதனை, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், முதியோர் பராமரிப்பு மற்றும் நோய்த்தணிப்புப் பராமரிப்பு, சிறப்பு மருத்துவ மையங்கள், ஊட்டச்சத்து மற்றும் ஆலோசனை சேவைகள், மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் போன்ற சேவைகளை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





