விசேட தேவையுடையோரின் தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் - வைத்தியர் இ.சிறிநாத் MP உறுதி












​கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட "புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பு" (Puthiya Paathai Disabled People’s Organization) நிர்வாகிகள் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இயலாமையுள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றிய உறுப்பினருமான வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் இன்று 16.04.2026 கோரகல்லிமடு பகுதியில் குறித்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பொதுக் கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதன் போது மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

​நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள், ​புதிய அரசாங்கம் பதவியேற்றதும் இவ்வாறான சமூக நலன் செயற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இதுவரை பாரியளவிலான திட்டங்கள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன் இருப்பினும், அதற்காகச் சோர்ந்துவிடாமல், விசேட தேவையுடைய மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தாம் தொடர்ச்சியாக முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும், மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், குறிப்பாக செயற்கைக் கால்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், அவர்களுக்கென விசேட மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் இதன்போது அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், "எமது வாழ்வில் நாம் பல்வேறு இழப்புகளையும் துயரங்களையும் சந்தித்திருந்தாலும், மிகுந்த நம்பிக்கையோடு மீண்டெழ வேண்டும்" என உருக்கமாகத் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவப் பண்புகளை ஊக்குவிப்பதன் மூலமே சமத்துவமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதையும், ஒவ்வொருவரினதும் தனித்துவமான திறமைகளை மதித்து அவர்களைச் சமூகத்தின் முதன்மை நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்குத் தாம் எப்போதும் துணை நிற்பேன் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதன் போது ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினரும்  பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்களின் பிரதான இணைப்பாளருமான த. பிரபாகரன், அரச அதிகாரிகள், புதிய பாதை விசேட தேவையுடையோர் அமைப்பு உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.