கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 


சிறைச்சாலைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த, பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதற்கமைய, வெலிசர கடற்படை தளத்திலுள்ள சிறைக்கூடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க குறிப்பிட்டார்.

இந்த நிலையில், கைதி ஒருவருக்கு வழங்க வேண்டிய அனைத்து வசதிகளும், பிள்ளையானுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எந்தவித அடிப்படை வசதிகளும் பிள்ளையானுக்கு வழங்கவில்லை என அவரின் கட்சி ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எமது செய்திச் சேவை வினவிய போதே, சிறைச்சாலைகள் பேச்சாளர் இந்த விடயத்தைக் கூறினார்.

எவ்வாறாயினும், ஏதேனும் விசேட தேவைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை உரிய முறையில் சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிடைக்கும் கோரிக்கைகளை சட்டரீதியாக அணுகி, இயலுமான விடயங்கள் செய்து கொடுக்கப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவிந்திரநாத் சுப்ரமணியம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.