மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 


நாட்டில் ஒருவரை மாத்திரம் கொண்ட தனிக்குடும்பங்கள் அதிகளவில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே காணப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுவதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையில், நாட்டின் குடும்பக் கட்டமைப்பு, குடும்பத் தலைவர்களின் பண்புகள், கல்வித் தகைமை மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகள் குறித்த தகவல்களிலேயே இவ்விடயம் வெளியாகியுள்ளது.

இலங்கையின் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 6,111,315 ஆகும். இதில் 58.9 சதவீதத்துடன் (3,598,976 குடும்பங்கள்) கருக் குடும்பங்கள் முதலிடத்தில் உள்ளன. கருக் குடும்பங்கள் என்பது பெற்றோர்கள் (தாய், தந்தை) மற்றும் அவர்களின் திருமணம் செய்யாத பிள்ளைகளை மாத்திரம் கொண்ட குடும்ப அமைப்பாகும்.

அதனைத் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்ட குடும்பங்கள் 29.7 சதவீதமாக காணப்படுகிறது.

இது பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுடன் மேலதிகமாக நெருங்கிய உறவினர்களையும் (தாய் வழிஃதந்தை வழி உறவினர்கள், பேரப்பிள்ளைகள் போன்றவை) உள்ளடக்கிய குடும்ப அமைப்பாகும்.

தனிநபர் குடும்பங்கள் 10.5 சதவீதமாகவும் மிகவும் குறைந்த அளவாக கூட்டு குடும்பங்கள் 0.9 சதவீதம் மாத்திரமே பதிவாகியுள்ளன.

அனைத்துத் துறைகளிலும் மாவட்டங்களிலும் 50 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கருக் குடும்பங்களாகவே உள்ளன.