முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில்
உள்ள பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்த சமீபத்திய
விடயங்களைக் கருத்தில் கொண்டு, சட்ட மற்றும் கொள்கை ரீதியான ஏற்பாடுகளை
மேலும் விரிவுபடுத்தி கடுமையாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
தெரிவித்துள்ளார்.
முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்துடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபைகளின் கீழ் உள்ள மாகாண முன்பள்ளி பிரிவுகள், முன்பள்ளிகள் உள்ளிட்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையங்களைப் பதிவு செய்வதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் பொறுப்பாக உள்ளன.
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மாகாண நன்னடத்தை திணைக்களங்களில் பதிவு செய்யப்படுவதுடன், அவை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
இவ்வாறான நிலையங்களை இயக்குவதற்குப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்ட போதிலும், சில நிலையங்கள் உரிய பதிவின்றி ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுடன் இணைந்து இயங்குவதால் ஒழுங்குமுறை செயல்முறை சிக்கலாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
முன்பள்ளிகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் தற்போதுள்ள மற்றும் முன்மொழியப்பட்ட தரநிலைகள் உரிமையாளர்கள், பராமரிப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவிக்கப்படும்.
இச்செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்காக வினைத்திறன் மிக்க இணையவழிப் பதிவு முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





