இலங்கையில் தனித்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விடப் பெண்களே அதிகம்

 


இலங்கையிலுள்ள தனிநபர் குடும்பங்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் 60 வயதுக்கும் மேற்பட்ட மதியவர்கள் என்பதுடன் தனித்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விடப் பெண்களே மிக அதிகமாக உள்ளதாகவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை சனத்தொகை மற்றும் வீடமைப்புப் புள்ளிவிபர அறிக்கையின்படி, தனிநபர் குடும்பங்களில் வசிக்கும் முதியவர்களின் (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்) நிலை குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தனிநபர் குடும்பமென்பது, ஒருவர் மாத்திரம் தனித்து வசித்து, தமக்கான உணவு மற்றும் தேவைகளை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளாமல் சுயமாகப் பூர்த்தி செய்துகொள்ளும் நிலையாகும்.

இலங்கையில் மொத்தம் 640,704 தனிநபர் குடும்பங்கள் பதிவாகியுள்ளன. இதில் அரைவாசிக்கு மேற்பட்டோர், அதாவது 370,229 நபர்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் ஆவர். இது தனிநபர் குடும்பக் கட்டமைப்பில் முதியவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாக இருப்பதைக் காட்டுகிறது.

தனித்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விடப் பெண்களே மிக அதிகமாக உள்ளனர்.

தனித்து வாழும் முதியவர்களில் 71.3 சதவீதம் (264,127 நபர்கள்) பெண்கள் ஆவர். இதில் ஆண்களின் பங்களிப்பு 28.7 சதவீதம் (106,102 நபர்கள்) மாத்திரமே ஆகும்.

குறிப்பாக, வயது அதிகரிக்க அதிகரிக்கத் தனித்து வாழும் ஆண்களின் எண்ணிக்கை குறையும் அதேவேளை, பெண்களின் எண்ணிக்கை விகிதாசார ரீதியில் உயர்வடைவதைக் காணமுடிகிறது.

70 வயதுக்கு மேற்பட்ட பிரிவினரை ஆராயும்போது, தனித்து வாழும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையில் சுமார் மூன்றில் ஒரு பங்காகவே உள்ளது.

வெவ்வேறு வயதுப் பிரிவுகளில் தனித்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கை வருமாறு:

60 – 64 வயது: இந்தப் பிரிவில் 79,253 பேர் தனித்து வாழ்கின்றனர் (பெண்கள் 64.8 வீதம், ஆண்கள் 35.2 வீதம்).

65 – 69 வயது: எண்ணிக்கை 87,792 ஆக உயர்வடைகிறது (பெண்கள் 70.4 வீதம், ஆண்கள் 29.6 வீதம்).

70 – 74 வயது: முதியவர்கள் தனித்து வாழும் அதிகூடிய எண்ணிக்கை இந்தப் பிரிவிலேயே பதிவாகியுள்ளது (88,157 நபர்கள்). இதில் பெண்களின் சதவீதம் 74.3 வீதம் ஆகும்.

75 – 79 வயது: 64,989 நபர்கள் தனித்து வாழ்கின்றனர் (பெண்கள் 75.0 வீதம், ஆண்கள் 25.0 வீதம்).

80 வயது மற்றும் அதற்கு மேல்: மிகவும் முதிர்ந்த வயதிலும் 50,038 நபர்கள் தனித்து வாழ்கின்றனர். இவர்களில் 73.5 வீதம் (36,753 நபர்கள்) பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து வயதுப் பிரிவுகளிலும் தனித்து வாழும் பெண் முதியவர்களின் எண்ணிக்கை ஆண் முதியவர்களை விட மிகத் தெளிவாகவும் கணிசமாகவும் உயர்ந்து காணப்படுகிறது.

இது இலங்கையின் சனத்தொகை கட்டமைப்பில் முதிய பெண் குடும்பத் தலைவர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத் தேவைகள் குறித்த கவனத்தை ஈர்க்கும் முக்கியமான புள்ளிவிபரமாகும்.

பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாக இருப்பதும், திருமண நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் (விதவைகள் ஆதல்) இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனத் தரவுகள் உணர்த்துகின்றன.