​​மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய சந்திப்பு









 ​​மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் காணி விவகாரங்கள், கல்வித் துறை சவால்கள் மற்றும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி, கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (29) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

​திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அவசரத் தேவைகள் அடங்கிய உத்தியோகபூர்வ கோரிக்கை மனு ஒன்றும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

​இச் சந்திப்பின் போது மேய்ச்சல் தரைக் காணி தொடர்பான நீண்டகாலப் பிரச்சினை, ​2018 ஆம் ஆண்டு முதல் இழுபறியிலுள்ள விவசாயிகளுக்கான மாற்றுக்காணி வழங்கும் பணிகளை மாகாண காணி ஆணையாளர் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும், வாழைச்சேனை - கருங்காலிச்சோலை மற்றும் மீராவோடை பகுதி மக்களின் விளையாட்டு மைதானம் மற்றும் மயானத் தேவைகளுக்காக காணிகளை விரைந்து விடுவிக்கக் கோரிக்கை விடுத்தல், ​கல்வித் துறையில் நிலவும் பின்னடைவுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயங்களில் நிலவும் கடும் ஆசிரியர் தட்டுப்பாட்டினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இதற்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

மட்டக்களப்பு மேற்கு வலய மாணவர்களின் நலன் கருதி பிரத்தியேக பேருந்து சேவையை ஆரம்பித்தல், செங்கலடி, வாழைச்சேனை மற்றும் வாகரை பகுதிகளில் இளைஞர்களை ஊக்குவிக்க விளையாட்டு உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் ​மீயங்கல் மதகு மற்றும் வண்ணாத்தி ஆறு அணைக்கட்டு ஆகியவற்றைப் புனரமைத்தல்.
​கிரான் மற்றும் செங்கலடிப் பகுதிகளில் சிதிலமடைந்துள்ள விவசாய வீதிகள் மற்றும் பாலங்களை விரைவாகச் சீரமைத்தல்,
​பாடசாலைகளுக்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் கட்டட வசதிகளைப் பூர்த்தி செய்தல் போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

நிர்வாகத் தாமதங்கள் மாவட்டத்தின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத், இந்த விவகாரங்களில் ஆளுநர் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரைகளை வழங்கி, நிதி ஒதுக்கீடுகளைச் செய்வார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

​இச்சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர இதன்போது உறுதியளித்தார்.