ஊடகவியலாளர்களைக் கொலை செய்வதில் இஸ்ரேல் உலகில் முதலிடத்தில் இருப்பதாக
ஊடகவியலாளர் பாதுகாப்பு குழுவின் (CPJ) பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோடி
கின்ஸ்பெர்க், கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
2025
மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற
நாடாக இஸ்ரேல் உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், கடந்த ஆண்டில்
மட்டும் உலகம் முழுவதும் கொல்லப்பட்ட 129 ஊடகப் பணியாளர்களில் மூன்றில்
இரண்டு பங்கினரின் உயிரிழப்பிற்கு இஸ்ரேலே பொறுப்பு எனச்
சுட்டிக்காட்டியுள்ளார்.
1992 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த ஊடகவியலாளர் மரண
எண்ணிக்கையாக இது கருதப்படுவதோடு, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைகளில் 81
சதவீதமானவை இஸ்ரேலியப் படையினரால் முன்னெடுக்கப்பட்டவை என்றும் அந்த
அமைப்பு தெரிவித்துள்ளது.
தகவல்களைப் பெறுவது மிக அவசியமானதாகவுள்ள
ஒரு காலகட்டத்தில், ஊடகவியலாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலக்கு
வைக்கப்படுவதாகவும், இது ஏனைய சுதந்திரங்கள் மீதான தாக்குதலின் ஆரம்ப
அறிகுறி என்றும் ஜோடி கின்ஸ்பெர்க் எச்சரித்துள்ளார்.
எவ்வாறாயினும்,
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இஸ்ரேலிய இராணுவம், தாம்
ஊடகவியலாளர்களை ஒருபோதும் வேண்டுமென்றே இலக்கு வைப்பதில்லை என்றும், ஆயுதக்
குழுக்களுடன் தொடர்புடையவர்களே இந்த தாக்குதல்களில் உயிரிழப்பதாகவும் கூறி
வருகின்றது.





