இலங்கையில் முதியோர் தொகை வேகமாக அதிகரிப்பு செல்வதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 




இலங்கையில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களைக் கொண்ட முதியோர் சனத்தொகை கடந்த சில தசாப்தங்களாகத் தொடர்ச்சியான மற்றும் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்புத் தொகைமதிப்பு அறிக்கையின்படி, இலங்கையின் முதியோர் சனத்தொகை மற்றும் சனத்தொகை வயோதிபமடைதல் தொடர்பான விரிவான தரவுகள் பல முக்கிய சமூகப் பொருளாதாரப் போக்குகளை வெளிப்படுத்துகின்றன.

1946 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் முதியோர் சனத்தொகை விகிதம் 5.5 சதவீதமாக சமநிலையில் காணப்பட்டது. இருப்பினும், 1963 ஆம் ஆண்டிலிருந்து இந்த விகிதத்தில் படிப்படியான உயர்வு அவதானிக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டில் 6.6 சதவீதமாக இருந்த முதியோர் சனத்தொகை, 2024 ஆம் ஆண்டில் 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 1981 முதல் 2024 வரையான காலப்பகுதியில் இலங்கையின் முதியோர் சனத்தொகை விகிதம் ஏறத்தாழ மூன்று மடங்காக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 2012 ஆம் ஆண்டில் 12.4 சதவீதமாக இருந்த இந்த விகிதம், மிகக் குறுகிய காலப்பகுதியில் 18 சதவீதத்தை எட்டியுள்ளது சனத்தொகை வயோதிபமடைதலின் வேகத்தைக் காட்டுகிறது.

15 வயதுக்கு குறைந்த 100 சிறுவர்களுக்கு இணையாகக் காணப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் ‘வயோதிபச் சுட்டெண்’ இலங்கையில் பாரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

1946 முதல் 1981 வரையான காலப்பகுதியில் இந்த சுட்டெண் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால் 2001 ஆம் ஆண்டிலிருந்து இதில் மிக வேகமான வளர்ச்சி பதிவாகியுள்ளது. 1981 இல் 18.8 ஆக இருந்த இந்தச் சுட்டெண், 2001 இல் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்ததுடன், 2024 ஆம் ஆண்டில் 87.0 என்ற உச்ச நிலையை அடைந்துள்ளது.

அதாவது, இலங்கையில் தற்போது ஒவ்வொரு 100 சிறுவர்களுக்கும் 87 முதியவர்கள் உள்ளனர். இது சிறுவர் சனத்தொகையும் முதியோர் சனத்தொகையும் சமநிலையை நெருங்கி வருவதைக் காட்டுகிறது.

முதியோர் சனத்தொகையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளதுடன், வயது அதிகரிக்கும் போது இந்தப் இடைவெளி மேலும் விரிவடைகின்றது.

2012 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 60 – 74 வயதுப் பிரிவு மற்றும் 75 வயதுக்கு மேற்பட்ட பிரிவு ஆகிய இரண்டிலும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாகக் காணப்படுகிறது.

60 – 74 வயதுப் பிரிவு: 2012 இல் 100 பெண்களுக்கு 83.1 ஆண்கள் என்றிருந்த பாலின விகிதம், 2024 இல் 82.1 ஆகக் குறைந்துள்ளது.

75 வயதுக்கு மேற்பட்ட பிரிவு: இப் பிரிவில் பாலின இடைவெளி இன்னும் அதிகமாக உள்ளது. 2012 இல் 100 பெண்களுக்கு 67.6 ஆண்கள் என்றிருந்த விகிதம், 2024 இல் 64.6 ஆக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் மூலம் முதியோர் சனத்தொகையில் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாக இருப்பதையும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரு நாட்டின் சனத்தொகையைச் சரியாக இரு கூறுகளாகப் பிரிக்கும் வயதான ‘மத்திய வயது’, இலங்கையின் சனத்தொகை அமைப்பு முதிர்ச்சியடைந்து வருவதை உணர்த்துகிறது.

1946 முதல் 1971 வரையான காலப்பகுதியில் இலங்கையின் மத்திய வயது ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே இருந்தது. குறிப்பாக 1963 இல் இது 19.4 ஆண்டுகள் என்ற மிகக் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. இருப்பினும், 1981 ஆம் ஆண்டின் பின்னர் மத்திய வயதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

1981 இல் 21.4 ஆக இருந்த மத்திய வயது, 2012 இல் 30.0 ஆகவும், 2024 இல் 35.0 ஆகவும் உயர்ந்துள்ளது. 1981 முதல் 2012 வரையான காலப்பகுதியில் மத்திய வயது சுமார் 9 ஆண்டுகளாலும், 2012 முதல் 2024 வரையான 12 ஆண்டுகளில் சுமார் 5 ஆண்டுகளாலும் அதிகரித்துள்ளது.

பெண்களின் மத்திய வயது (36.0) ஆண்களின் மத்திய வயதை (34.0) விட அதிகமாக இருப்பதும் சனத்தொகை முதிர்ச்சியில் பெண்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்தத் தரவுகளின் அடிப்படையில், இலங்கை சனத்தொகை வயோதிபமடைதல் காரணமாகப் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக சுகாதாரத் துறைக்கான அதிகரித்த கேள்வி, முதியோருக்கான சமூக-பொருளாதார பாதுகாப்புத் திட்டங்களின் அவசியம், ஓய்வூதியத் திட்டமிடல் மற்றும் முதியோர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட தொழில் வாய்ப்புகள் ஆகிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.