மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ள போதிலும், அமெரிக்கப் படைகள் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
இது குறித்து அட்மிரல் பிராட் கூப்பர் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர், தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா தனது தாக்குதல் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இருப்பினும், ஈரான் இராணுவ ரீதியாக ஒரு மிகப்பெரியத் தோல்வியைச் சந்தித்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்தோடு, ஈரானின் இராணுவ வலிமை ஒரு தலைமுறைக்கே மீள முடியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கூப்பர், ஆனாலும் அமெரிக்கப் படைகள் இந்தப் பிராந்தியத்தில் தொடர்ந்து விழிப்புடனும், தேவைப்பட்டால் உடனடியாகச் செயல்படும் தயார் நிலையிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்கா தனது பிராந்தியக் கூட்டாளிகளுடன் எப்போதும் தோளோடு தோள் நின்று பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும், போர் நிறுத்தம் என்பது விழிப்புணர்வைக் குறைப்பதற்கான அடையாளம் அல்ல என்றும் அவர் தனது செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.





