பிறந்திருக்கும் பராபவ புது வருடத்தில் நாட்டில் 70 உயிர்கள் பறிபோன சோகம்..

 


கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பாரிய உயிர்ச்சேதங்கள் பதிவாகியுள்ளன.

வீதி விபத்துக்கள் காரணமாக 45-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் அதிவேகமாக வாகனங்களைச் செலுத்தியமையாலேயே ஏற்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மட்டும் 19 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆறுகள், குளங்கள் மற்றும் ஏரிகள் போன்ற பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் நீராடச் சென்ற 25-இற்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை குருநாகல், கொபேகன பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 8 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மொரகொடவில பகுதியில் ஒருவரும், எம்பிலிப்பிட்டிய பகுதியில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கொண்டாட்டங்களுக்காக நீர்நிலைகளுக்குச் செல்பவர்கள் மற்றும் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினர் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகின்றனர்.