ஒரு வைத்தியரை உருவாக்குவதற்கு அரசாங்கம் 6 மில்லியன் (60 இலட்சம்) ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிடுகிறது .

 


இலங்கையில் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி ஒரு வைத்தியரை உருவாக்குவதற்கு அரசாங்கம் 6 மில்லியன் (60 இலட்சம்) ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிடுவதாக அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொட பகுதியில் நேற்று (04) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஒரு வைத்தியரை முழுமையாகப் பயிற்றுவித்து உருவாக்குவதற்கு அரசாங்கம் 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிடுகிறது.

ஒரு பொறியியலாளரை உருவாக்குவதற்கு சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, ஏனைய தொழில்துறைகளுடன் ஒப்பிடுகையில் மருத்துவக் கல்விக்காக அரசாங்கம் பாரிய முதலீட்டைச் செய்து வருவதை அவர் உறுதிப்படுத்தினார்.
பேராசிரியர் பன்னில தனது உரையில், இலங்கையின் வரலாற்றில் 'வைத்திய அரசன்' எனப் புகழப்பட்ட புத்ததாச மன்னரின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்தார்.

இலங்கை சமூகத்தில் மருத்துவர்கள் நீண்டகாலமாக உயர்வாக மதிக்கப்பட்டு வருவதாகவும், அந்த கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள் எனத் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் பயின்று வெளிவரும் இத்தகைய தொழில் வல்லுநர்கள், நாட்டுக்கு பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தையும் தரம் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.