மட்டக்களப்பு வந்தாறுமூலையில் தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
























​​"மனிதம் காக்க உதிரம் கொடுப்போம்" எனும் உன்னத தொனிப்பொருளில், தந்தை செல்வாவின் 49ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 26.04.2026 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்ததான நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் வந்தாறுமூலையில் அமைந்துள்ள அரசியல் பணிமனையில் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

​இரத்ததான நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக தந்தை செல்வாவிற்கு கௌரவ மாரியாதை செலுத்தப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச் சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

​​அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து இரத்ததான முகாம் ஆரம்பமானது.

இதில் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது பெறுமதியான குருதியை தானமாக வழங்கினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினால் இரத்தக் கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை சேகரிக்கும் பணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

​​இந் நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர், மகளிர் அணி உறுப்பினர்கள், கட்சியின் மாவட்டக் கிளை, பிரதேசக் கிளைகளின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியப் பற்றாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

​தந்தை செல்வாவின் நினைவைப் போற்றும் வகையில் சமூகப் பணியாக  இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.