தந்தை செல்வநாயகம் அவர்களின் 49ஆவது நினைவு தினம் வடக்கு கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.

 


தந்தை செல்வநாயகம் அவர்களின் 49ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த நிகழ்வானது இடம்பெற்றிருந்தது.

இதன்போது, அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான நினைவு பேருரைகளும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவருக்கான அஞ்சலிகளை செலுத்தினர்.

  

இதேவேளை, திருகோணமலையிலும் தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

திருகோணமலையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டக்கிழைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவு நிகழ்வில் திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் நா. செல்வராஜா, பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தங்களது மரியாதையைச் செலுத்தினர்.