மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் கதிரவனின் மாபெரும் வில்லுப்பாட்டுப் போட்டி- 2026.04.19

















































வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவை நடத்தும் ஔவை விழா-2026 நிகழ்வில் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான வில்லுப்பாட்டுப் போட்டி 19.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு- நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

கதிரவன் பட்டிமன்றப் பேரவைத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில், வேல்முருகன் சகோதரர்கள் முன்னிலையில்     சிவயோகச் செல்வர் சாம்பசிவம் சிவாச்சாரியார் ஆன்மீக விருந்தினராகவும், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சு. சந்திரகுமார் மற்றும் கண்ணகி கலை இலக்கியக் கூடல் தலைவர் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணன் முதன்மை விருந்தினர்களாகவும், இந்து கலாசார நிலையத்தின் பொறுப்பாளர் - இந்து கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் கதிரவன் கலைஞர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் மேற்படி நிகழ்வில்  பங்குபற்றியிருந்தனர்.

தெரிவு செய்யப்பட்ட பத்து அறநெறிப் பாடசாலைகளுக்கி டையிலான போட்டியாக வடிவமைக்கப்பட்ட வில்லுப்பாட்டு போட்டியில் ஔவை புகழ் மற்றும் ஔவையின் அறக்கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் வில்லுப்பாட்டுகள் அமைந்திருந்தன.

நிகழ்வில் ஔவை விழா வில்லுப்பாட்டுப் போட்டி இணைப்பாளர் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் பேச்சாளர் புதுவையூர் பு.தியாகதாஸ் இணைப்பாளர் உரையினையும், ஔவை விழா விளக்க உரையினை கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் பொருளாளர்  மட்டுநகர் சிவ வரதகரன் நிகழ்த்த, கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் உபசெயலாளர் திரு சி.சுதேஸ்வரன் நன்றியுரையினையும் வழங்கியிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பினை கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் துணைத்தலைவர் சோலையூரான் ஆ. தனுஷ்கரன் அவர்கள் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

வில்லுப்பாட்டுப் போட்டியின் விசேட வாழ்த்துரையினை சிவயோகச் செல்வர் சாம்பசிவம் சிவாச்சாரியார் அவர்கள் நிகழ்த்த, கதிரவன் பட்டிமன்றப் பேரவை உறுப்பினர் கவிஞர் ரவி கிருஷ்ணா, கதிரவன் பட்டிமன்றப் பேரவைச் செயலாளர் கவிஞர் அழகு தனு,  கதிரவன் பட்டிமன்றப் பேரவை இணைப்பாளர்  பாலமீன்மடு இரா கலைவேந்தன், கதிரவன் பட்டிமன்றப் பேரவை உறுப்பினர் நகைச்சுவைப் பூபால் ஆகியோர் வில்லுப்பாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட்டனர். 

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அறநெறிப் பாடசாலை - ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர் அணியாகவும், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு சேக்கிழார் அறநெறிப் பாடசாலை சுவாமி விபுலானந்தர் அணியாகவும், கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை சுவாமி ஜீவானந்தா அணியாகவும், ஸ்ரீ கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை எல்லாளன் அணியாகவும், பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்பிரமணியர் அறநெறிப் பாடசாலை புலவர்மணி அணியாகவும், செங்கலடி-கணபதி நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை யோக சுவாமி அணியாகவும், அம்பிளாந் துறை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை உலக நாச்சியார் அணியாகவும், மகிழவெட்டுவான் சக்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை வீ.சி கந்தையா அணியாகவும்,  குருக்கள் மடம் சிவநெறி மன்ற அறநெறிப் பாடசாலை ஆடக சௌந்தரி அணியாகவும், களுதாவளை ஓம் சக்தி அறநெறிப் பாடசாலை பண்டார வன்னியன் அணியாகவும் போட்டியில் பங்கு பற்றினர்.

 பங்கு பற்றிய அனைத்து அணிகளுக்கும் சான்றிதழ் மற்றும் புத்தகப் பரிசல்கள் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும். மேற்படி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பணப் பரிசில்கள், மற்றும் சான்றிதழ்கள், ஔவை நினைவுச் சின்னங்கள் என்பன ஔவை விழாவின் போது வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.