2025 உயர்தரப் பரீட்சையில் 65% பெண்கள் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

 


2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பெண்களின் தேர்ச்சி விகிதம் (70.65 வீதம்) ஆண்களின் தேர்ச்சி விகிதத்தை (59.01 வீதம்) விட அதிகமாகக் காணப்படுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களில் 58,782 பேர் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உயர்தரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தமாக 340,592 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பித்தவர்களில் 281,810 (82.74 வீதம்) பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இவர்களில் 109,632 பேர் ஆண்களும், 172,178 பேர் பெண்களும் ஆவர்.

தோற்றியவர்களில் மொத்தமாக 176,527 (62.64 வீதம்) பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

பாடசாலை விண்ணப்பதாரர்களில் மொத்தம் 246,571 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 221,413 (89.80 வீதம்) பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

தோற்றியவர்களில் 146,405 (66.12 வீதம்) பேர் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இதில் பெண்களின் தேர்ச்சி விகிதம் (70.65 வீதம்) ஆண்களின் தேர்ச்சி விகிதத்தை (59.01 வீதம்) விட அதிகமாகக் காணப்படுகிறது.

மொத்த பாடசாலை விண்ணப்பதாரர்களில் 7,477 (3.38 வீதம்) பேர் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தியைப் பெற்றுள்ளனர்.

இரண்டு பாடங்களில் சித்தியடைந்தவர்கள்: 33,201 (15.00 வீதம்).

ஒரு பாடத்தில் சித்தியடைந்தவர்கள்: 22,442 (10.14 வீதம்).

அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியவர்கள்: 19,301 (8.72வீதம்).

இதேவேளை பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றவர்களில் பெண்களே முன்னிலையில் உள்ளனர்.

பாடசாலை விண்ணப்பதாரர்களில் பல்கலைக்கழகத் தகுதி பெற்றவர்களில் 65 வீதம் பேர் பெண்கள், மீதமுள்ள 35 வீதம் பேர் ஆண்கள் ஆவர்.

ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களைக் கருதும் போதும் இதேபோன்ற 65 வீதம் (பெண்கள்) மற்றும் 35 வீதம் (ஆண்கள்) என்ற விகிதாசாரமே காணப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, 2025 உயர்தரப் பரீட்சையில் தோற்றியவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகத் தகுதி பெற்றுள்ளமையும், அதில் பெண்களின் பங்களிப்பு மிக உயர்வாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.