தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக, பாடசாலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அது தொடர்பான பயிற்சிகளை முடிந்தவரை அதிகாலை வேளைகளில் மாத்திரம் முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவிக்கையில்,
நண்பகல் வேளையிலேயே சூரிய வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுவதால், இவ்வாறான வெளிப்புற நிகழ்வுகளை அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மாத்திரம் ஏற்பாடு செய்வது மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, கடும் வெயில் நிலவும் மதிய நேரங்களில் மாணவர்களை நீண்ட நேரம் மைதானங்களில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறும், பயிற்சிகளைத் திட்டமிடும்போது காலநிலையைக் கருத்திற்கொண்டு செயல்படுமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறான உஷ்ணமான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.





