நிலக்கரி விநியோகம் தாமதமானால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் தேசிய மின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்

 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த கவலை எழுந்துள்ளது.

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கான 25 நிலக்கரி கப்பல்களில், ஏற்கனவே தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டு வந்த 12 கப்பல்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன.

இந்தநிலையில், வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச கடல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, மீதமுள்ள நிலக்கரியை விநியோகிக்க மே மாதம் 10ஆம் திகதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு விநியோகஸ்தர்கள் கோரியுள்ளனர்.

சுமார் 900 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நுரைச்சோலை மின் நிலையம், நாட்டின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்கிறது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த விநியோகத் தாமதம் தேசிய மின் கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

2025 மற்றும் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்ததாக இருந்ததாக எழுந்துள்ள முறைப்பாடுகள், ஏற்கனவே இந்த விவகாரத்தை சிக்கலாக்கியுள்ள நிலையில், தற்போதைய போர் சூழல் கூடுதல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.