குடிநீருக்கான சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்டவர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

 

 


உற்பத்திச் செலவு அதிகரிப்பு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்து செய்யுமாறு அல்லது தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக ஜனாதிபதி, தொழில் அமைச்சர் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், 2025 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி நிர்ணயிக்கப்பட்ட விலைக் கட்டமைப்பில் தம்மால் தொடர்ந்து தொழிலை முன்னெடுக்க முடியாது என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு, போத்தல் தயாரிப்பிற்குத் தேவையான 'PET' பிளாஸ்டிக் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள சர்வதேச கப்பல் போக்குவரத்து கட்டண உயர்வு போன்றவை பெரும் சுமையாக மாறியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. 

 இந்த விலைக் கட்டுப்பாடுகளால் சிறு மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தநிலை தொடர்ந்தால் சந்தையில் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம் உள்ளதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.