எமது நிலத்தையோ, ஆகாயத்தையோ அல்லது நீரையும் பயன்படுத்த நாம் அனுமதிக்கப்போவதல்லை- நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார

 


எந்தவொரு நாட்டுக்கும் சார்பாகவோ அல்லது மற்றொருவருக்கு தீங்கு விளைவிப்பதற்காகவோ எமது நிலத்தையோ, ஆகாயத்தையோ அல்லது நீரையும் பயன்படுத்த நாம் அனுமதிக்கப்போவதல்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? இவர்களுக்கு சர்வதேச உறவுகள் இல்லை, ஒரு பெட்டிக்கடையைக் கூட நடத்தத் தெரியாது என்று சொன்னார்கள். நான் இதை அடிக்கடி சொல்கிறேன், சர்வதேச நாணய நிதியமும் (IMF) நாட்டை விட்டு வெளியேறும் என்று கூறினார்கள்.

எமது ஜனாதிபதியின் இராஜதந்திரத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. சர்வதேச சமூகம் எமது ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இப்போது அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதல் முழு உலகையும் பாதிக்கும் ஒன்று என்பது நமக்குத் தெரியும். அதேபோல், எந்த நாட்டில் எங்கு போர் நடந்தாலும் பாதிப்பு மனித உயிர்களுக்குத்தான். அதனால்தான் எமது வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதியும் கூடிய விரைவில் அமைதியை ஏற்படுத்துமாறு எப்போதும் கோரிக்கை விடுக்கின்றனர்.

சிறிய நாடாக இருந்தாலும், எமது அரசாங்கத்தின் தன்னம்பிக்கையும் எமது மனச்சாட்சியும் மிகப்பெரியது. உலகில் எந்தவொரு மனிதனும் எந்தக் காரணத்திற்காகவும் இறப்பதை நாம் விரும்பவில்லை.

அதேபோல், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச சாசனங்களின்படி நாம் எப்போதும் நடுநிலையாகச் செயல்படும் ஒரு நாடு.

எந்தவொரு நாட்டுக்கும் சார்பாகவோ அல்லது மற்றொருவருக்கு தீங்கு விளைவிப்பதற்காகவோ எமது நிலத்தையோ, ஆகாயத்தையோ அல்லது நீரையும் பயன்படுத்த நாம் அனுமதிக்க மாட்டோம். நாம் நடுநிலையானவர்கள், அதே சமயம் மனிதாபிமானம் மிக்கவர்கள். என அவர் மேலும் தெரிவித்தார்.