வாகன உரிமையாளர்களுக்கு கூடிய விரைவில் இலக்க தகடுகள் .

 


இலங்கையில் இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத்தகடு அச்சிடும் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, புதிய தனியார் நிறுவனம் ஒன்றுடன் 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான உத்தியோகபூர்வ ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டது.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, அமைச்சரவையின் அங்கீகாரம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், நீண்ட கால கொள்முதல் செயல்முறைக்கு பின்னரே இந்த ஐந்து ஆண்டு கால ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஒப்பந்தத்தின்படி, குறித்த நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

இருப்பினும், தற்போது நிலவும் அதிக தேவையைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.

கடந்த 10 மாதங்களாக இலக்கத்தகடு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததால், பெருமளவிலான நிலுவைகள் (Backlog) குவிந்துள்ளன.

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத முதல் வாரத்தில் இலக்கத்தகடு அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெர வளாகத்தை மையமாகக் கொண்டே இந்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கான ஆரம்பகட்ட கட்டுமானப் பணிகள் ஏற்கனவே வேரஹெர வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

அச்சிடுவதற்குத் தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.