மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்ற சமிக்ஞையை ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் போது இந்த விருப்பத்தை அவர் தெரிவித்துள்ள போதிலும், பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
ஈரானின் தேசிய உரிமைகள் மற்றும் இறையாண்மை முழுமையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதுடன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானில் ஏற்பட்ட பாரிய உள்கட்டமைப்புச் சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளுக்குத் தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மீண்டும் நிகழாது என்பதற்கான வலுவான சர்வதேச சட்ட உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் ஒரு முக்கிய நிபந்தனையாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தங்களுக்குத் துளியும் நம்பிக்கையில்லை என ஈரான் பலமுறை கூறிவந்துள்ள போதிலும், பிராந்திய அமைதியைக் கருத்திற்கொண்டு இந்தப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளதாக ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.





