மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிக்குமா ?

 


எரிபொருள் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் கப்பல் கட்டண அதிகரிப்பு போன்ற காரணிகளால், தற்போதைய விலையில் மருந்துப் பொருட்களை விநியோகிப்பது சாத்தியமற்ற ஒன்று என உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் (SLPMA) நேற்று (23) விடுத்துள்ள அறிவிப்பில், தற்போது கையிருப்பில் உள்ள மூலப்பொருட்கள் தீர்ந்தவுடன், அரச மற்றும் தனியார் துறையினரிடம் விலை திருத்தத்தைக் கோரவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மூலப்பொருட்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

அவற்றின் விலையும், போக்குவரத்துச் செலவும் கணிசமாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நளின் கன்னங்கர தெரிவித்துள்ளார்.

தற்போது பழைய கையிருப்புகளைக் கொண்டு உற்பத்தி நடப்பதால் உடனடி விலை உயர்வு இருக்காது.

இருப்பினும், அடுத்த 2 முதல் 4 வாரங்களுக்குள் நிலைமை மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் "நாங்கள் அதிக இலாபத்தை எதிர்பார்க்கவில்லை, உற்பத்திச் செலவை ஈடுகட்டவே இந்த விலை மாற்றத்தைக் கோருகிறோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதோடு, விநியோகச் சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையின் மருந்து உற்பத்தித் துறையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், மருந்து விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உற்பத்தியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.