எரிபொருள் விலைகள் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பஸ்களில் சுமார் 90 வீதமானவை சேவையிலிருந்து விலகியுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன அதன் காரணமாகவே நேற்றைய தினம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தாமலிருக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார். புதிய பஸ் கட்டண திருத்தம் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்ட பின்னரே பஸ் சேவைகளை மீண்டும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. நூற்றுக்கு 31 வீதமாக அந்த விலையதிகரிப்பு இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் குறைந்தபட்சம் 15 வீதத்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பஸ் கட்டணங்களை உத்தியோகபூர்வமாக அதிகரிப்பது தொடர்பில் நேற்று இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.





