இலங்கையில் போர்க்குற்றங்களோ அல்லது இனப்படுகொலையோ நடைபெறவில்லை எனவும், உலகிலேயே அதிகப்படியான பணயக் கைதிகளை மீட்ட பெருமை இலங்கை இராணுவத்தையே சாரும் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
"இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை நடந்ததாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
பிரபாகரன் சுமார் 3 இலட்சம் மக்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருந்தார். அவர்களில் 2 இலட்சத்து 90 ஆயிரம் பேரை எமது படையினர் மனிதாபிமான அடிப்படையில் மீட்டெடுத்தனர்.
உலக வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான பணயக் கைதிகளை மீட்ட ஒரே இராணுவம் இலங்கை இராணுவமாகும். அவ்வாறு மீட்கப்பட்ட மக்கள் அனைவரும் முறையாக மீள்குடியமர்த்தப்பட்டனர்.
இலங்கை இராணுவம் முன்னெடுத்த இவ்வாறான மனிதாபிமானத் திட்டங்களுக்கு பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவ அமைப்புகள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை." - என்றார்.





