தமிழ் ஆசிரியர்களுக்கு கௌரவம், ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்!






வடகிழக்கில் நிர்வாக மொழியாகவும் முதன்மை மொழியாகவும் உள்ள தமிழ் மொழியை மாணவர்கள் மத்தியில் ஆங்கில கலப்பின்றி கற்றுக் கொடுப்பதற்காக தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கௌரவிப்புகளும், ஊக்குவிப்பு தொகைகளும், விருதுகளும் வழங்கப்பட வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார். 

உலகத் தாய்மொழி தினமாக பெப்ரவரி 21ம் திகதி அனுஸ்டிக்கப்படும் நிலையில் அது குறித்த கூட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

ஒரு தேசிய இனத்தின் அடையாளமே மொழிதான், மொழி அழிந்து போகுமாக இருந்தால் இனம் அழிந்து போகும்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ்.

வரலாற்று ஆய்வுகளின் படி உலகின் மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி என்றே கூறப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட அண்மையில் உலகின் முதல் மொழி இந்தியாவில் பேசப்படுவது இந்தியாவுக்கு பெருமை என கூறியிருந்தார்.





வரலாற்றில் இந்தியாவின் தமிழகத்தில் தமிழ் மொழிக்கு எதிராக இந்தியை திணித்த போது அதற்கு எதிராக தமிழகமே கொந்தளித்து பெரும் போராட்டம் வெடித்தது.
அது குறித்த வரலாற்று திரைப்படமாக தற்போது சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மொழி உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.



பின்னர் 1978 மற்றும் அதற்குப் பின்னரான (13, 16 ஆவது) திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கு அரசகரும மொழி அந்தஸ்தை வழங்கப்பட்டது.

 அத்தோடு மொழி உரிமை என்பது இலங்கையில் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள ஒன்று.

ஆனால் இன்றுவரை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வழங்கப்பட்ட மொழி உரிமைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

இலங்கையின் மத்திய அரச திணைக்களங்கள் முதல் கொண்டு மாகாண அரச திணைக்களங்கள் வரை தமிழ் மொழி புறக்கணிப்பு மற்றும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்காத செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. 

இலங்கையின் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே உள்ளது.
இருந்த போதிலும் 
தொல்பொருள் திணைக்களம் முதல் கொண்டு வனஜீவராசிகள் திணைக்களம் வரை வடகிழக்கில் சிங்கள மொழியையே முதன்மைப்படுத்தி வருகின்றனர். 

நாங்கள் சிங்கள மொழியை எதிர்க்கவோ வெறுக்கவோ இல்லை சிங்கள மொழியையும், தமிழ் மொழியையும் இலங்கையில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். 

ஆனால் தமிழர்களின் நிலங்களை, அடையாளங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் திட்டமிட்டு சிங்கள, ஆங்கில மொழிகளை திணிப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் அதனை நாம் எதிர்க்கின்றோம். 

இவ்வாறு ஒரு புறம் தமிழ் மொழியை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசுடன் போராடி வரும் நாம் மறுபுறம் தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள தமிழர்களே தமிழ் மொழியை மிக மோசமாக புறக்கணிப்பதை காணக்கூடியதாக உள்ளது. 

சிங்களமும், தமிழும் இலங்கையின் தேசிய மொழிகள், தமிழ் வடகிழக்கின் நிர்வாக மொழி என எமக்கான மொழி உரிமை சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள போதிலும். வடகிழக்கில் முறையான தமிழ் மொழி பிரயோகம் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. 
வடகிழக்கில் உள்ள பெயர் பலகைகள் முதல் கொண்டு அரச திணைக்களங்களின், பாடசாலைகளின் மொழிப் பயன்பாடு முற்றிலும் ஆங்கிலத்தில் மற்றும் தமிங்கிலத்தில் தான் உள்ளன. முறையான தமிழ் மொழி பிரயோகம் நடைமுறையில் இல்லை. 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன் உதாரணம். 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று பாருங்கள் உண்மையில் அங்கு மொழி அடையாளங்கள் சிறப்பாக பேனப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆங்கில மருத்துவ சொற்களுக்கு மான தமிழ் சொற்களோடு தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி பெயர் பலகைகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை வடகிழக்கில் உள்ள அனைத்து திணைக்களங்களும் பின்பற்ற வேண்டும். 

மறு புறம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பெயர் பலகைகள் தமிங்கிலம் அல்லது ஆங்கிலத்தில் தான் உள்ளன. 

தாய், தாய்மொழி இரண்டுமே எமக்கான அடையாளம் மட்டும் அல்ல அது எமது உணர்வு, பண்பாடு, வரலாறு, அதனை இழிவு படுத்தவோ, அதை தரம் குறைவாக நடத்தவோ யாரும் அனுமதிக்க மாட்டார்கள். 

யாரோ ஒருவர் நம் தாயையும், தாய் மொழியையும் அவமானப் படுத்தும் போது எமக்கு வரும் கோபம். 
நாம், நமக்கு அருகில் இருப்பவர்கள் அதை செய்யும் போது ஏன் கோபம் வருவதில்லை. 

எனவே இனியாவது நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும். 
தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் எதிர்கால சந்ததியிருக்கு முறையாக கற்றுக் கொடுப்பதற்கும் நாம் ஓரணியில் செயற்பட வேண்டும். 

மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் வர்த்தக நிலையங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. 
ஆனால் அவை வெறுமனே பிரேரணைகளாக உள்ளதே தவிர நடைமுறைக்கு வரவில்லை. 

நாம் ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் நோக்குடன் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதற்கு அமைய கலப்பற்ற தமிழ் மொழியை மாவட்டம் பூராகவும் அடையாளப் படுத்தும் நோக்குடன் ஆரம்பித்திருக்கின்றோம். 

மிக முக்கியமாக ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்களின் பெயர் பலகைகளை தமிழ் மொழிக்கு மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். 

அதேபோல், முச்சக்கர வண்டிகளில் தமிழில் தமிழ் மொழி சார்ந்த, தமிழினத்தின் பெருமைகளை கூறும் வசனங்களை அடையாளப்படுத்த உள்ளோம், அதேபோல் பிரதேச சபை பிரிவில் உள்ள பொது கட்டிடங்கள், பேருந்து தரிப்பிடங்களில் தமிழ் மகுட வாசகங்களை அடையாளப்படுத்த உள்ளோம், 

மிக முக்கியமாக தமிழில் கையெழுத்து இட மாணவர்களை பழக்கத்திற்கு கொண்டு வரும் நோக்கில். தமிழில் கையெழுத்திடும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் கல்வி ஊக்குவிப்புகளை வழங்க உள்ளோம், அதேபோல் தமிழ் மொழியை கலப்பின்றி முறையாக மாணவர்களுக்கு கற்பிக்கும் தமிழ் மொழி ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு தொகை விருதுகள் வழங்கி கௌரவிப்பு செய்ய உள்ளோம். 
அத்துடன் கலப்பற்ற தமிழ் மொழி பயன்பாடு அதன் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்குகள், பேச்சு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டி உள்ளது. 
இதற்கான நிதி உதவிகளை புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களிடம் கோரி நிற்கின்றோம். 

மாற்றம் என்பது வெறும் பேச்சிலும் எழுத்திலும் இல்லாமல் செயற்பாட்டில் காண்ணால் பார்த்து உணரும் வகையில் அமைய வேண்டும் அந்த வகையில் கலப்பற்ற தமிழ் மொழி பிரயோகத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும். என தெரிவித்தார்.

 

  ந.குகதர்சன்