மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல்






 







மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்தரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இன்று (27) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழுத்தலைவர் சுகத் வசந்த டி சில்வா, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழு இணைத்தலைவர் பத்மநாதன் சத்தியமூர்த்தி, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கந்தசாமி பிரபு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்யன், இளையதம்பி ஸ்ரீநாத், ஆகியோரின் பங்கு பற்றுதலுடன்  இடம் பெற்றது.

இலங்கைப் பாராளுமன்றத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழுத்தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகளை ஆதரித்தல் மற்றும் விரிவான சட்டமன்றக் கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் முதலானவற்றை மையமாகக் கொண்ட  மாவட்ட மட்ட குழு இன்று அமைக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் மாற்று திறனாளிகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள திட்டங்களை  நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன் ஓர் அங்கமாக நாடளாவிய ரீதியில் மூன்றாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான கலந்துரையாடல் இடம் பெற்றன.

மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளிகள் எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக கலந்துரையாடி அது தொடர்பான விடயங்களைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் மாவட்ட ரீதியாக கலந்துரையாடல் இடம் பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9000 மேற்பட்ட மாற்று திறனாளிகள் காணப்படுவதுடன் 14 மாற்றுதிறனாளி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கருத்து தெரிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழுத்தலைவர் மாற்றுதிறனாளிகளுக்கு மனித நேய அடிப்படையில் நாம் சேவையை வழங்க வேண்டும் மேலும் ஒரு மனித நேய சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும் என்பதுடன் மாற்று திறனாளிகள் பரீட்சைகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினை தீர்ப்பதற்கு கல்வி அமைச்சிடம் கலந்துரையாடப்பட்டதாக இதன் போது தெரிவித்தார்.

 மேலும் மாற்று திறனாளிகளின் பெற்றார்கள் தங்களது பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளில் அவதானம் செலுத்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தி சமூகத்துடன் இணைத்து கொள்ளல்,  விசேட வினாத்தாள்களை தயாரித்தல், விசேட தேவைக்குரிய நபர்களுக்கான வாகன இருக்கைகள், பல்கலைக் கழகங்களில் விசேட கண் புலன் அற்ற மாணவர்களுக்காக கற்கை நெறியை ஆரம்பித்தல் மேலும் மாவட்டத்தில் மாற்று திறனாளிகள் வீடுகளில் முடங்கியிருப்பதனால் அவர்களையும் சமூகத்துடன்  இணைந்து முன்னேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து பல கோரிக்கைகள் முன்வைக்கபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் உதவி மாவட்ட  செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சந்திரகலா கோணேஸ்வரன், அரச உயர் அதிகரிகள், திணைக்கள தலைவர்கள், துறை சார் நிபுணர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 வரதன்