( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின்
உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும்
அச்சத்திலும் அவதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பல
ஆண்டுகளாக இடம்பெற்று வரும் கடலரிப்பு சமீப காலங்களில் மிகவும்
வேகமடைந்துள்ளதாகவும், இதனால் குடியிருப்புகள் மற்றும் நிலப்பரப்புகள்
கடலுக்குள் இழுக்கப்பட்டுள்ளது.
கடந்த
சில வாரங்களில் பல வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சில குடும்பங்கள்
தங்களது வீடுகளை விட்டு உறவினர்களின் இல்லங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களின் படகு நிறுத்தும் இடங்கள் மற்றும்
மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதி
மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கியிருந்த
போதிலும், இதுவரை நிலையான தீர்வு எதுவும் அமுல்படுத்தப்படவில்லை என
குற்றஞ்சாட்டுகின்றனர்.
தற்காலிக கற்கள் அடைப்போ அல்லது கடற்கரை பாதுகாப்புச் சுவர் அமைப்பதற்கான நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என மக்கள் குறைபடுகின்றனர்.
“ஒவ்வொரு
நாளும் கடல் மேலும் மேலும் கரையை உடைத்து வருகிறது. எங்கள் வாழ்வாதாரமும்,
வீடுகளும் ஆபத்தில் உள்ளன. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால்
நிலைமை கட்டுக்கட்டுப்பாடுகளை மீறிவிடும்” என அப்பகுதி மக்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.
சமூக
அமைப்புகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் அவசரமாக சம்பவ இடத்தை
பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரண உதவிகள்
வழங்கப்பட வேண்டும் என்றும், நிரந்தர கடற்கரை பாதுகாப்புத் திட்டம் ஒன்றை
விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அட்டப்பள்ளம்
கடலரிப்பு பிரச்சினை தற்போது அவசர தீர்வு தேவைப்படும் சூழ்நிலையாக
மாறியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட துறைகள் எப்போது செயல்படுகின்றன என்பது
மக்கள் மத்தியில் கேள்வியாக உள்ளது.
அங்குள்ள கிராமவாசி ஒருவர் தெரிவிக்கையில்..
ஒவ்வொரு
நாளும் இந்த கடல் இப்படி வந்து வந்து தோண்டி தோண்டி போகுது. தொழிலுக்கு
போகேலாது. பயமாய் இருக்கு. புள்ள குட்டியோட பயத்தோடு இங்கே
வாழுறம்.விடிஞ்சா கடல் நடுவூட்டுக்குள் வந்திருமோ என்று பயந்து போய்
இருக்கம்.நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாது . அலை வந்து வந்து
போறாப்போல
எல்லாரும் வாறாங்க போறாங்க . ஒன்டுமே நடக்கல்ல. ஆண்டவன் தான் காப்பாத்தோணும் என்றார்.
சுமார்
500 மீற்றருக்கும் அதிகமான பகுதி மற்றும் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள்
கிணறுகள் கடலால் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டவர்களின்
காணிகள் கடலுக்கு இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மக்கள்
பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
நேற்று முன்தினம்
பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலாளர் மற்றும் குழுவினர் சென்று
பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்ததாக
சொன்னார்கள்.
கடலரிப்பைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும்
கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் நேற்றும் கூட அங்கேயே பய பீதியுடன்
உள்ளனர். அவர்களை வேறிடத்தில் தற்காலிகமாவது பாதுகாப்பாக தங்க வைக்க
நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
எந்த இன மக்களென்றாலும் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.jpg)












