மட்டக்களப்பில் சாரணியத்தின் தந்தை சேர் பேடன்பவலின் 169வது ஜனன தின நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்க தலைவர் ஏ.நிசாந்தன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரணர் கிளை தலைவருமான ஜே.எஸ் அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
உலகளாவிய ரீதியில் சேர் பேடன்பவலின் பிறந்த தினத்தினை முன்னிட்டு சாரணியர்களினால் பல நிகழ்வு இடம் பெற்று வருகின்றன.
நாடளாவிய ரீதியில் பல விசேட நிகழ்வுகள் இடம் பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவணி காத்தி பூங்காவில் இருந்து நீரூற்று பூங்கா வரை நேற்றைய தினம் இடம் பெற்றன.
தன்னலத்திற்குப் பதிலாக பிறர் நலனை மனதில் வைத்து உலக சகோரத்துவத்தின் மூலம் சிறுவர்களின் ஒழுக்கத்தையும் ஆரோக்கியத்தையும் அபிவிருத்தி செய்து நாட்டிற்கும் தேசத்திற்கும் பயன்படக்கூடிய, சிறந்த உத்தமர்களாக்குவதற்காக பேடன் பவலினால் உருவாக்கப்பட்டதே சாரணிய இயக்கமாகும்.
இந் நோக்கத்தினை இன்றும் பாடசாலை ரீதியாக மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் சாரணிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதனை குறிக்கும் வகையில் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த வழிப்புணர்வுபேரணி நடைபெற்றது.
நீரூற்றுப்பூங்காவில்
உள்ள சாரணர் சிலைக்கு கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில்
கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் சாரண மாணவர்கள் ஒழுக்கத்தை மிக கண்ணியமான முறையில் வெளிப்படுத்தி வருவதாக கூறி மாணவர்களுக்கு சாரணியத்தின் முக்கியத்துவம் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட சாரண ஆணையாளர்கள், சாரண ஆசிரியர்கள், மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்க உப தலைவர் பி.தினேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.













