அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால்
இதுவரை காலமும் முறைசாரா முறையில் வழங்கப்பட்டு வந்த "ஊடக அடையாள அட்டைகளை"
இனிவரும் காலங்களில் மிகவும் விதிகளுக்கு உட்பட்டு, முறையாக வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ
பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் சுமார் 8,100 அடையாள
அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், தகுதியானவர்களைத் தெரிவு செய்வதன்
மூலம் இந்த எண்ணிக்கையை 5,000 வரை குறைக்க முடியும் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு (2026), 877 பிரதேச
ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 4,700 ஊடகவியலாளர்களுக்கு மட்டுமே புதிய
அடையாள அட்டைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனைய அரசு நிறுவனங்களின்
ஊடகப் பிரிவினரையும் சேர்த்தால் இது 5,000 ஐ எட்டும்.
அடையாள அட்டைகளின் எண்ணிக்கையைக்
குறைப்பது என்பது தகுதியானவர்களைப் புறக்கணிப்பதல்ல, மாறாகத்
தகுதியற்றவர்களுக்குச் சென்றடைவதைத் தடுப்பதற்கே என அவர் விளக்கமளித்தார்.
அரச மற்றும் தனியார்
ஊடகவியலாளர்களுக்குப் பாகுபாடின்றி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட
புலமைப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை
காலமும் தகவல் திணைக்களத்தின் சில அதிகாரிகள் மட்டுமே வெளிநாட்டுப்
பயணங்களில் பங்கேற்று வந்த நிலையை மாற்றி, இனிவரும் காலங்களில்
ஊடகவியலாளர்களுக்கும் அந்த வாய்ப்புகள் முறைப்படி பகிர்ந்தளிக்கப்படும் என
அவர் உறுதி அளித்தார்.





