பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் தொற்றா நோய் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம். ருதேஷன் அவர்களின் ஒருங்கிணைப்பில் உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு, மாணவர்களிடையே உடல் பருமன், அதனால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பாடசாலை மட்டத்தில் பேச்சுப் போட்டி ஒன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே. மோகனகுமார் அவர்களின் தலமையில் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலிருந்தும் க.பொ.த (உ.தர) மாணவர்கள் இதில் பங்கேற்றனர். பாடசாலை
மட்டத்தில் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கிடையே, இன்றைய தினம் இறுதிக்கட்ட பேச்சுப் போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் நடுவர்களாக வைத்தியர் ஆர்.நவலோஜிதன், உதவி கல்விப்பணிப்பாளர் திரு.ந. நேசகஜேந்திரன், ஆசிரிய ஆலோசகர் திரு.எ.ஜெயரஞ்சித் கலந்துகொண்டு மாணவர்களின் பேச்சுத் திறனை மதிப்பீடு செய்தனர். போட்டி முடிவில், நடுவர்களால் மாணவர்களுக்கு பேச்சுத் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள், திருத்தங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களின் பேச்சு நிகழ்ச்சியானது, வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக உடல் பருமன் தின விழிப்புணர்வு நிகழ்வில் அரங்கேற்றப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்களிடையிலும் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
























